Monday, August 14, 2006

தீ மிதித்து thermodynamics பாடம் நடத்திய விரிவுரையாளர்

எனது ஊரில் "பூமிதித்தல்" என்பது பிரபலம். இந்த கட்டுரையின் அடுத்த பத்தியினைப் படிக்காமல் அதென்ன பெரிய பிரமாதம்! நான் கூட செய்வேனே என்று அவசரப்பட்டு சபதம் செய்துவிடாதீர்கள்.

அந்த திருவிழாக் காலங்களில், கோவிலுக்கு முன்னே நீளமாய் ஒரு குழி திருவிழாவிற்கு சில நாட்கள் முன்னதாகவே வெட்டப்பட்டு விடும். அடுத்த நாள் விறகு கட்டைகள் குழியின் முன்னதாக குவித்துவைக்கப்படும். திருவிழா தினத்தன்று சாயங்காலம் விறகுகட்டைகளை குழியினுள் இட்டு, தீவைத்துக் கொளுத்துவார்கள். அது தக தகவென்று எறிந்து முடிந்து கனன்று கொண்டிருக்கும். அந்த நேரத்தில் இரவும் வந்திருக்கும். கடவுளுக்கு தீபார
தனை முடிந்தபின், பக்தர்கள் ஒவ்வொருவராய், சாமி வந்த நிலையில் (?) திடு திடுவென்று, தீயின் மீது ஓடி மறு பக்கத்தை அடைவார்கள். நான் சிறுவனாய் இருந்த, அந்த சமயங்களில் என்னைக் கடவுள் நம்பிக்கை கொள்ள வைத்த சம்பவங்களில் இதுவும் ஒன்று. பிற்காலங்களில், கடவுள் உண்டு, இல்லை என்று வரும் வாக்குவாதங்களுக்கு கடவுள் அல்லது சக்தியிருப்பு கொள்கையை நிறுவுவதற்கு, நான் ஏகமாய் பயன்படுத்திக்கொண்ட சம்பவம் இது. அதன் பின் ஒருமுறை, ஒரு விவரமான நாத்திக நண்பரிடம் இந்த தீமிதித்தல்் நிகழ்ச்சியை கடவுள் இருப்பு கொள்கைக்கு, ஆதாரமாய் நான் பயன் படுத்தியபோது அவர் சொன்ன விசயம் என்னை ஆச்சரியப்படுத்தியது. அதாவது, திராவிட கழக நண்பர்கள் ´கடவுள் இல்லை´ என்று சொல்லிக்கொண்டே தீமிதித்ததாக அவர் கூறிய சம்பவம் தான் அது. இருந்த போதிலும், அது மாதிரியான சம்பவத்தை நான் நேரில் பார்த்ததில்லை. ஆனால், அவர் கூறியதை முழுவதும் பொய்யென்று எடுத்துக்கொள்ள முடியவில்லை.

தீ மிதித்தல் எல்லோராலும் சாத்தியப்படக்கூடிய ஒன்றென்றால், அதற்கான விளக்கம் என்ன? சாமி வருதல் என்றால் என்ன? அந்த நிலையில் இருக்கும் மனிதனுக்கு ஏன் தீ சுடுவதில்லை? அந்த கேள்விகள் மட்டும் விடை கிடைக்காமல் என்னிடம் நிரந்தரமாய் இருந்தன? ஆனால், இந்த செய்தியை இன்று படிக்கிற போது, ஏதோ கொஞ்சம் உண்மை இருப்பது மாதிரி, இந்த நிகழ்வின் பின்னணி புரிந்த மாதிரி தெரிகிறது. அதை உங்களிடம் பகிர்ந்துகொள்ளலாம் என்பதற்கே இந்த பதிவு. அந்த செய்தி கீழே தரப்படுகிறது:

Physics professor David Willey doesn't use chalk and formulas to spark his students' interest in thermodynamics.

Instead, he walks on fire.

"Nothing gets a student's attention like the possibility that I might kill myself," said Willey, this year's winner of the President's Award for Excellence in Teaching at the University of Pittsburgh at Johnstown.

அந்த செய்தியில் தீமிதித்தல் எப்படி சாத்தியமாகிறது என்பது பற்றிய விளக்கம் கொடுக்கப்படுகிறது. தீமிதித்தல் சாத்தியமாவது அறிவுக்கு புலப்படாத சக்தியானாலோ, மத நம்பிக்கையினாலோ இல்லை. உண்மையில், மரக்கட்டைகளை உபயோகப்படுத்தி நெருப்புப் படுகைகளை உருவாக்குவதினாலேயே இது சாத்தியமாகிறது. நெருப்புக்கட்டைகளின் வெப்பம் 1000 பாரன்கீட்டுக்கு மேலே போனாலும் கூட இது சாத்தியமாவது, கட்டை ஒரு அரிதில் கடத்தி (insulator) என்பதாலேயே. இது வெப்பம் கால்களை அடைந்துவிடாமல் அடக்கி வைத்துக் கொள்கிறது. மேலும், இதன் மேலாக உள்ள எறிந்த பட்டைகளின் சாம்பல் இன்னும் வெப்பத்தை கால்களுக்கு வரவிடாமல் தடுத்து விடுகின்றன. அதோடு மிக வேகமான நெருப்பின் மீதான நடை, தீமிதித்தலை முழுவதுமாய் சாத்தியப்படுத்துகிறது.

முடிவாக வைலே(willey) கூறுவதாவது:

It's a matter of stepping up to the start line with courage and training your brain to get your foot to take the first step.

"You could keep on going forever and ever," Willey told LiveScience. "It's just a question of how much wood you want to cut."


7 Comments:

Blogger சீமாச்சு.. said...

அன்பு புதுமை விரும்பி..
இந்த பிஸிக்ஸ் ப்ரொபசர் சொல்றதைப் பாத்தா அந்தக் காலத்துலெ எங்க பாட்டி விறகு அடுப்புல வெந்நீர் போட்டதையோ அல்லது விறகு அடுப்பிலேயே 300 பேருக்கு கல்யாணச் சாப்பாடு சமைத்ததையுமே நம்ப மாட்டாரு போல் இருக்கே.

அறிவியல் விஷயங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டியதுதான்.. "மெய்ப்பொருள் காண்பது அறிவு" என்பது நம்ம கொள்கையில்லயா?

சாம்பல் இருந்தால் சூடு தெரியாதாமா? எங்க ஊர்ல தீமிதி போது ஒரு பச்சை த் தென்னை மட்டை வெச்சுக்கிட்டு அப்பப்போ நெருப்பின் மீது அடிச்சிக்கிட்டே இருப்பாங்க.. நெருப்பு மேல இருந்த சாம்பல் பறந்து போயிடும்.

தி.க காரங்க தீமிதிச்சாங்க தான்.. அது எப்படீங்கறது ஒரு கேலிக் கூத்து! அதைப் பத்தி முன்னரே படிச்சிருக்கேன்..

நான் சொல்றது தப்புன்னு நெனச்சீங்கன்னா.. பதில் பின்னூட்டம் போடறதுக்கு முன்னாடி ஒரு தடவை மரத்துக் கரி நெருப்பு மேல காலை வெச்சு பாத்துட்டுப் போடுங்க... அதான் ப்ரொபசர் சொல்லிருக்காரே.. சுடாது.. பயப்படாதீங்க!!

என்றென்றும் அன்புடன்,
சீமாச்சு

5:57 PM  
Blogger dondu(#11168674346665545885) said...

"அதென்ன பெரிய பிரமாதம்! நான் கூட செய்வேனே என்று அவசரப்பட்டு சபதம் செய்துவிடாதீர்கள்."
கவுண்டமணி மற்றும் கார்த்திக் முறையே அவரவர் படங்களில் அவ்வாறு செய்து அவஸ்தைப்பட்டனர்.

தெர்மொடைனமிக்ஸ் புரொஃபசர் ஆனாலும் சரி, நாத்திகர் ஆனாலும் சரி பக்தரானாலும் சரி மனம் ஒருமித்தல் மிக்க அவசியம். அது இல்லாவிடில் பூ மிதிக்க இயலாது.

அதே போல நிற்காமல் சென்று கொண்டேயிருக்க வேண்டும். கரகாட்டக்காரன் படத்தில் வருவது போல நின்று நிதானமாக நடனம் ஆடக்கூடாது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

6:18 PM  
Blogger வஜ்ரா said...

புதுமை,

நல்ல தகவல்...டோண்டு அவர்கள் சொல்வது போல், மனம் ஒருமித்தல் மிக அவசியம்...!

1:22 AM  
Blogger புதுமை விரும்பி said...

வருகைக்கு நன்றி சீமாச்சு அவர்களே!

//தி.க காரங்க தீமிதிச்சாங்க தான்.. அது எப்படீங்கறது ஒரு கேலிக் கூத்து! அதைப் பத்தி முன்னரே படிச்சிருக்கேன்..//

அந்த கேலிக்கூத்து என்னன்னு சொன்னீங்கன்னா தெரிஞ்சுக்குவோம்ல...

3:50 AM  
Blogger Muse (# 01429798200730556938) said...

அன்பிற்குரிய புதுமை விரும்பி அவர்களே,

இன்னொன்றையும் கவனித்திருப்பீர்கள். அதாவது தீ மிதிப்பவர்கள் ஓரிரு மாதங்களுக்கு முன்பிருந்தே விரதம் இருப்பார்கள். இந்த விரதத்தின்படி அவர்கள் காலணிகள் அணியக்கூடாது. ஏறத்தாழ ஓரிரண்டு மாதங்கள் காலணி அணியாததால், பாதத்தில் உள்ள தோல் கெட்டிப்பட்டிருக்கும். நெருப்பில் தவறிப்போய் டான்ஸ் ஆடினாலும் பாதிப்பு ஏற்படாது.

மேலை நாடுகளில் தன்னம்பிக்கை வளர்ப்பு பற்றி கோச்சிங்க் கொடுப்பவர்கள் நெருப்பு மிதிப்பை ஒரு டெக்னிக்காக பயன்படுத்துகிறார்கள். எந்த விதமான மத ரீதியான கருத்துக்களும் போதிக்கப்படவில்லை.

இன்னொன்று. இந்த தீ மிதிப்பை ஹிந்துக்கள் மட்டும் செய்வதில்லை. இஸ்லாமியரும் செய்வதுண்டு. சிப்பிக்குள் முத்து படத்தில் கமலஹாஸன் ராதிகாவின் பையன் உடல்நலம் பெற வேண்டும் என்பதற்காக ஒரு மஸுதியின் முன்பு தீ மிதிக்கும் காட்ஷி ஞாபகம் வரலாம். இஸ்லாமில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் ஒரு குறிப்பிட்ட நாளில் தங்களை ரத்த விளாராக மாறும்வகையில் சாட்டையாலும், மற்ற ஆயுதங்களாலும் அடித்துக் கொள்வதுண்டு. (இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு இந்திய அரஸாங்கம் மட்டும்தான் ஓட்டிற்காக விடுமுறை அளித்துள்ளது. வேறு எந்த இஸ்லாமிய நாட்டிலும் இல்லை. ஆனால், அது இந்த இடத்தில் சம்பந்தப்படாத வேறு விஷயம்.)

கிருத்துவர்களிலும் இது போன்ற வேறுமாதிரியான பழக்கங்கள் உண்டு. தெற்காஸியாவின் சில நாடுகளில் தங்களை சிலுவையில் அறைந்து கொள்ளும் மக்கள் உண்டு. குறிப்பிட்ட கோரிக்கை நிறைவேறுமானால் தான் இத்தனை முறை சிலுவை ஏறுவதாக வேண்டிக்கொண்டு, கோரிக்கை நிறைவேறும்வரை சிலுவையில் அறைந்துகொள்ளுவார்கள். மிக மிக வேதனை தரும் செயல் அது. பிறகு தங்களை ஒவ்வொரு முறையும் அறைந்து கொண்ட ஆணிகளை யேஸு பிரானின் முன் வைப்பவர்.

நம்மூரில் முருகப்பெருமானுக்கு வேல் குத்தி, அலகுகள் குத்தி தேர் இழுப்பதையெல்லாம் சிலுவை ஏறுவதன் வேதனையோடு கம்பேரே செய்ய முடியாது.

வேல் மற்றும் அலகுகளை உடம்பில் கண்ட இடங்களில் குத்திக் கொள்வதில்லை. வலி தராத, ஆபத்தில்லாத இடங்களில்(அக்யுபங்க்சர் பாய்ண்ட்கள் போல) குத்திக் கொள்வர். (தமிழர்களின் வர்மக்கலை அறிவும் காரணம்). நாமெல்லாம் ஆண்டவனுக்கே அல்வா கொடுப்பவர்கள் !

முள் படுக்கை வேறொரு டெக்னிக். யாரும் ஒரே ஒரு ஆணி வைத்த படுக்கையில் படுப்பதில்லை.

இருந்தாலும், இதெல்லாம் செய்வதற்கு ஒரு வலியை ஏளனம் செய்யும் மன உறுதி தேவை.

என்ன? என்ன சொல்கிறீர்கள்? அது சரி. ஆளை விடுங்கள்.

நான் வீட்டிற்குள்ளேயே செருப்பு போட்டுக்கொண்டு நடக்கவேண்டும் என்று சொல்பவன்.

5:40 AM  
Blogger புதுமை விரும்பி said...

வருகைக்கு நன்றி டோன்டு சார் மற்றும் வஜ்ரா அவர்களே.

நீங்கள் சொல்வது மாதிரி, இதில் மன ஒருமுகப்படுத்தலின் பங்கு முக்கியமானது. இன்னும், இது மாதிரி இந்தியாவில் மிகச்சாதாரனமாய் அரங்கேறி விடுகிற அதிசயங்களுக்கு, அறிவியல் இன்னும் விளக்கம் கொடுக்க முடியாமல் திருதிருவென்று முழித்துக்கொண்டு தானிருக்கிறது.

5:43 AM  
Blogger புதுமை விரும்பி said...

நன்றி ம்யூஸ் அவர்களே.

//இன்னொன்றையும் கவனித்திருப்பீர்கள். அதாவது தீ மிதிப்பவர்கள் ஓரிரு மாதங்களுக்கு முன்பிருந்தே விரதம் இருப்பார்கள். இந்த விரதத்தின்படி அவர்கள் காலணிகள் அணியக்கூடாது. ஏறத்தாழ ஓரிரண்டு மாதங்கள் காலணி அணியாததால், பாதத்தில் உள்ள தோல் கெட்டிப்பட்டிருக்கும். நெருப்பில் தவறிப்போய் டான்ஸ் ஆடினாலும் பாதிப்பு ஏற்படாது.//

தீமிதித்தல் வெற்றிஅடைவதற்கு, இதுவும் ஒரு முக்கியமான காரணம்.

அதோடு, கடவுளுக்காக என்ற பெயரில் உடம்பை வருத்திக்கொள்ளுதல் மற்ற மதங்களிலும் இருக்கிறது என்ற தகவல் எனக்கு புதியது. தகவலுக்கு, நன்றி.

//என்ன? என்ன சொல்கிறீர்கள்? அது சரி. ஆளை விடுங்கள்.

நான் வீட்டிற்குள்ளேயே செருப்பு போட்டுக்கொண்டு நடக்கவேண்டும் என்று சொல்பவன். //

:-)))
நான் விழுந்து விழுந்து சிரித்தேன். அதனால், உடம்பில் எத்தனை காயம் என்று கேட்டுவைக்காதிர்கள்.

3:37 AM  

Post a Comment

<< Home

Free Hit Counter
Google PageRank

Your Ad Here