Wednesday, July 26, 2006

எப்பொழுதாவது கவிதைமேயும் என் காலிப்பக்கங்கள்!

எழுதுவது மிக எளிதாகத்தான்
இருந்தது ஒரு காலத்தில்...

சன்னல் வழியே கிளையை அனுப்பி
பூவாசம் தெளித்து
துயிலெழுப்பும் ஒரு செடி.

பார்த்த நாளிலிருந்தே
ஒரே திசையில் முகம் சுழிக்காமல்
பயணித்துக்கொண்டிருக்கும் ஒரு நதி.

தினம்தினம் வந்து நலம் விசாரித்துவிட்டு
மாலையில் கையில் கம்பு ஏந்திக்கொண்டு
தள்ளாடி வெளியேறும் வெளிச்சம்.

நிற்கக்கூட இடமில்லாமல்
மொத்தமாய் பூத்துக்கிடக்கும் நட்சத்திரக்காடு.

அத்தனை காட்டிற்கும்
ஒரே காவல்காரனாய் வெளிச்சமேந்தி நிலா.

அகத்தி மரத்தின் நிழல்கள்
சத்தமில்லாமல் படுத்து உருளும் மொட்டைமாடி.

இரவு முழுதும் வெளிச்சம் போட்டு
எதையோ தெடிக்கொண்டிருந்த மின்மினிக்கூட்டம்.

விடியல் முதல் இரவு வரை
'இதுகளின்' சகவாசம் இருந்த ஒருகாலத்தில்
எழுதுவது மிக
எளிதாகத்தான் இருந்தது.

'இதுகளின்' உறவுகள்
தொலைந்த இப்போதெல்லாம்
பசியோடு தானிருக்கின்றன
என் கவிதைப்புத்தகத்தின் பக்கங்கள்.

இருந்தாலும், எப்பொழுதோ நடுஇரவில்
தப்பித்தவறி காற்றி விலக்கிய திரை வழியே
நுழைந்து விடுவதுண்டு நிலவொளி!

சந்தோசப்படுத்துவதற்குப் பதில்,
அவசரத்தில் எடுத்து வைத்த
காலடியில் சிக்கிக்கொண்ட மலராய்
அது என் முகம் சுழிக்க வைப்பதுண்டு.

நிர்வாணமாய் குளித்துக்கொண்டிருந்தவனின்
அறைக்குள் தவறி நுழைந்த தடுமாற்றத்தில்
அதுவும் திகைத்து நிற்பதுண்டு.

கொஞ்ச நேரத்தில், சுதாரித்துக்கொண்டு
சங்கோசத்தில் திரையை மூடிவிட்டு
பதில் சொல்லாமலேயே அது வெளியேறுவதுண்டு.

அந்த நேரங்களில் மட்டுமே
அவசர அவசரமாய்
கவிதை மேய்கின்றன என் காலிப்பக்கங்கள்.

3 Comments:

Blogger கார்திக்வேலு said...

நல்ல கவிதை !

7:24 PM  
Blogger கார்த்திக் பிரபு said...

nalla kavidhai thodarndhu eluthungal..valthukkal

5:00 AM  
Blogger புதுமை விரும்பி said...

வருகைக்கும் உற்சாகமூட்டும் வார்த்தைகளுக்கும் நன்றி கார்த்திக் வேலு மற்றும் கார்த்திக்பிரபு அவர்களே!

5:16 AM  

Post a Comment

<< Home

Free Hit Counter
Google PageRank

Your Ad Here