Thursday, July 06, 2006

சத்தியப்பிரமாணம்

என் எண்ணங்களை, பார்வைகளை, விருப்பங்களை, ஆசைகளை, கனவுகளை, உங்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு முன், மொழி, சமூக, இன, மத மற்றும் அரசியல் மீதான என் நிலைப்பாடுகளை உங்களுக்கு அறிவிப்பது அவசியம் என்று நினைக்கிறேன். இது உங்களுக்கு என் எழுத்துக்கள் மீதான நம்பகத்தன்மையை அதிகப்படுத்துவதற்கு உதவியாய் இருக்கும். மொழி, சாதி, மதம், வசதி, அதிகாரம் மற்றும் கல்வி அடிப்படையில், ஒரு மனிதன் (அல்லது சமுதாயம்) இன்னொரு மனிதனை தாழ்மைப்படுத்தவோ, தன் கீழான அடக்கு முறையில் வைத்திருக்கவோ, ஆட்சி செய்யவோ முயற்சி செய்கிறான். இப்பொழுது மொழி, சாதி, மதம் அடிப்படையிலான வகைப்படுத்தல்கள், அடக்குமுறைகள் குறைந்து வந்தாலும், வசதி, அதிகாரம் மற்றும் கல்வி சார்ந்த அடக்குமுறைகள் மனிதர்களுக்கிடையெ அதிகரித்து வருவது கூர்ந்து பார்த்தால் மிகத்தெளிவாக புலப்படுகிற ஒரு விசயம். இன்னும் புரியும்படி சொல்ல வேண்டுமென்றால், மனிதர்களின் அடிமைத்தனம் ஒரு ஆயுத்தின் கீழேயிருந்து இன்னொரு ஆயுதத்தின் கீழே இடம்மாறியிருக்கிறது. மேலும் கொடுங்கோலாட்சி மற்றும் ஏகாதிபத்தியத்தின் கோரமுகங்கள் இப்பொழுது தனி(சில) மனித வன்முறையாய் மாறியிருக்கின்றன. இன்னும் சொல்லவேண்டுமென்றால் இப்பொழுது யுத்தங்கள் நாடுகளுக்கும் நாடுகளுக்கும் இடையிலில்லை- மாறாக மனிதனுக்கும், மனிதனுக்கும் தான். இப்படியாக இருக்கிற ஒரு காலகட்டத்தில், பொறுப்புணர்வுள்ள- சமுதாயத்தின் அக்கறையில் நம்பிக்கையுள்ள ஒவ்வொரு மனிதனும் ஒரு சத்திய பிரமாணத்தில் கையெழுத்திடுவது அவசியமாகப்படுகிறது. நானும் என் எழுத்தைத் தொடங்குவதற்கு முன் இப்படியான ஒன்றை செய்துகொள்ள விரும்புகிறேன். எனது அறிவு, வசதி, அதிகாரம் மற்றும் எனது இருப்பு, எந்த ஒரு மனிதனையும் சிறுமைப்படுத்தவோ, அவனது இன, மதம் மற்றும் சமுதாயம் சார்ந்த நம்பிக்கைகளைக் கேலி செய்வதற்கோ பயன்படுத்தப்படமாட்டாது. மேலும் தவறான செய்திகளை, கற்பிதங்களை, "மீம்"(meme)களை இந்த சமுதாயத்தில் உலவவிடுவதற்கு எப்பொழுதும் முயற்சி செய்ய மாட்டேன். மாறாக, சமுதாயத்தில் நிலவிவரும் ஏற்றத்தாழ்வுகளை களைவதற்கும், நல்லிணக்கம் ஏற்படுவதற்கும் என்னாலான முயற்சிகளைச் செய்வேன்.
(பின் குறிப்பு: இந்த Memeகள் பற்றி கூடிய விரைவில் ஒரு கட்டுரை எழுத உள்ளேன்)


2 Comments:

Blogger ALIF AHAMED said...

நல்ல முயற்சி தொடரட்டும் உங்கள் பணி எத்தனை இடர் வந்தாலும்

12:25 PM  
Blogger புதுமை விரும்பி said...

வருகைக்கு நன்றி மின்னல் அவர்களே!

2:10 PM  

Post a Comment

<< Home

Free Hit Counter
Google PageRank

Your Ad Here