Monday, September 11, 2006

சாத்தானின் சதுரம்; நடுவில் நாம் - I

செய்தித்தாள்கள், வானொலி மற்றும் தொலைக்காட்சி என்ற மூன்றையும் சாத்தானின் முக்கோணம் (Devil's Triangle) என்று சொல்வார்கள். காரணம், ஒரு மனிதனுக்கு இவைகள் மூன்றும் முதனிலை செய்தி தரும் ஊடகங்களாக இருக்கும் போது, எது உலகத்தில் உண்மை என்று அவனுக்குத் தெரியாமல் போய்விடுகிறது (அதாவது, இந்த ஊடகங்கள் சார்பற்ற பொது நிலையில் இல்லாமல் போகும்போது). இந்த ஆபத்தான முதனிலை ஊடகங்களில், இப்பொழுது தாராளமாக வலைப்பூக்களையும் (blogs), தொடுப்புச்சொல் தேடும் தளங்களையும் (search engines) சேர்த்துக்கொள்ளலாம். அதனால், இந்த ஆபத்தான முதனிலை ஊடகங்களின் தொகுப்பை இணையத்தையும் சேர்த்து, சாத்தானின் சதுரம் (Devil's square/rectangle) என்று இனிமேல் அன்பாக அழைக்கலாமே!!! மேற்குறிப்பிட்ட மற்ற ஊடகங்களை விட, கடைசியாக குறிப்பிட்ட இணைய தளங்கள் மிகவும் ஆபத்தானவை. எனது கருத்துக்கு ஆதாரமான சில செய்திகளை உங்களிடம் இப்பொழுது பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.

இந்த இணைய ஊடகங்கள், எல்லோராலும், மிக எளிதில் அடையக்கூடிய ஒன்றாக இருப்பது, அதற்கு ஒரு காரணம். யார் வேண்டுமென்றாலும், தனக்கென ஒரு வலைப்பூவை உருவாக்கிக்கொண்டு, முதல் பதிப்பிலேயே "மகாத்மா காந்தி உண்மையில் தேசபக்தரா?", "மகாகவி பாரதியின் கருப்புப்பக்கம்", என்று கேள்விகளைக் கேட்டுவிடலாம். இல்லை என்றால், யாரையாவது வம்புக்கிழுத்து ஒரு பதிவைப் போட்டுவிடலாம். வலைப்பூக்களில், ஒரு மனிதனுக்கு முகம் காட்டவேண்டிய அல்லது தான் யாரென்று அறிவிக்க வேண்டிய அவசியமில்லை. அதனால், அவன் திரையரங்குகளில் இருட்டில், மிக மோசமாக அசிங்க வார்த்தைகளுடன் comment அடிக்கும் அதே நடவடிக்கைகளைச் செய்வதற்கு இன்னுமொரு இடமாக
வலைப்பூ மாறி வருகிறது. ஆனால், மற்ற ஊடகங்களில், இந்த மாதிரி இருட்டில் கருப்புத்தத்துவம் உதிர்க்க வாய்ப்புகள் இல்லை. அதோடு கருத்துகள் சொல்வதற்கு, ஒரு குறைந்தபட்ச தகுதிகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

அடுத்தபடியாக, வலைப்பூக்களில் பதிக்கப்படும் ஒரு தலைபட்சமான செய்திகள் பற்றி குறிப்பிட விரும்புகின்றேன். சமீப காலமாக, தமிழ் மணம் என்ற வலைப்பூ திரட்டியில் நடந்த முக்கியமான விவாதங்களாக உயர் கல்வி நிலையங்களில் (ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம் மற்றும் ஐ.ஐ.எஸ்.சி) இட ஒதுக்கீடு அவசியமா? இஸ்ரேலின் லெபனான் மீதான தாக்குதல் நியாயமானதா? போன்றவைகளைக் கொள்ளலாம். நடு நிலை வாசகர்களுக்கு, கடைசி வரை எது சரியானது என்பது புலப்படாமலேயே இருந்திருக்கும். கடைசியாக நாம் இது பற்றி, எந்த வலைப்பதிவைப் படித்தோமோ அந்த கருத்துக்கள் சரியானவை என்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும். வழக்காடு மன்றத்தில், இதே மாதிரியான ஒரு நிகழ்வினை நாம் எல்லாம் உணர்ந்திருப்போம். ஒரு அணியின் பேச்சாளர் பேசிக்கொண்டிருக்கும் போது, அவரது அணி தான் வெற்றி பெறும் என்ற எண்ணம் தோன்றும். ஆனால், வலைப்பூக்களிலும் இது மாதிரியான ஒரு தோற்றம் ஏற்படுவது வருந்தத்தக்கதே. அதாவது உண்மை அல்லது சரியானது என்பது எது என்று கண்டுபிடிப்பதற்கு கடினமான ஒரு யுகத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். எந்த யுகத்திலும், உண்மை இத்தனை வலிமையற்றதாய் இருந்திருக்குமா என்பது சந்தேகமாய் இருக்கிறது. உண்மையின் ஒடிந்துவிழும், திறனற்ற, தன்னை காத்துக்கொள்ள முடியாத நிலை மறுக்கமுடியாத ஒன்று. ஆனால், அதற்கான சில காரணங்கள் என்ன என்று இங்கே ஆராய்வோம்.

(1) பதிவாளர், முன்பாகவே தான் ஆதரவு அளிக்கிற கொள்கைகளுக்கு எதிரான கருத்துக்களை முழுவதும் ஒதுக்கிவிடுவது

(2) பிரச்னையின் ஆரம்பம் என்பது, இந்த முடிவெடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உதாரணமாக, இஸ்ரலிய வீரர்களை ஹிஸ்பொல்லா இயக்கத்தினர் கடத்தியதை இந்த இஸ்ரல்-லெபனான் பிரச்னையின் ஆரம்பமாக வைத்துக்கொண்டால், இஸ்ரலின் நடவடிக்கை என்பது சரியானது போலத் தோன்றும். மாறாக, இஸ்ரல் விசாரணையின் பேரில் கடத்திவைத்திருக்கும் எண்ணற்ற பிணைக்கைதிகளை விடுவிக்கும் பொருட்டாக ஹிஸ்பொல்லா இயக்கம் எடுத்த நடவடிக்கையாக இதைப் பார்த்தால், இஸ்ரலின் நடவடிக்கை தவறு என்பது போலத்தோன்றும். அதோடு ஒரு பிரச்னையின் ஆரம்பம் என்று எதை வைத்துக்கொள்வது என்பது அவரவரின் சொந்த அபிப்பிராயம் சம்பந்தப்பட்டது.

அடுத்தபடியாக, சொற்தொடுப்பு தேடும் இணையங்களால் நேரும், ஒரு நிகழ்வு பற்றிய குழப்பமான தகவல்களை உங்களுடன் என் அடுத்த பதிவில் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். (அப்புறம் எப்படி, எனது பதிவுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது?)

அதுவரை, நீங்கள், வலைப்பூவை எப்படி சாத்தானின் சதுரத்திலிருந்து வெளியில் எடுப்பது என்பது பற்றி யோசித்து உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்களேன்.

2 Comments:

Blogger Muse (# 01429798200730556938) said...

மக்களுக்கு தகவலை தந்து குழப்புகின்ற எல்லாமே எங்கள் கிருத்துவ மதத்தில் சாத்தானின் வேலைகள்தான். இன்டெர்னெட் கூட சாத்தான்தான் என்று நாங்கள் நிறுவியுள்ளோமே. தெரியாதா?

ஹீப்ரூ மற்றும் க்ரேக்க மொழிகளில் நம்பர்களுக்கும் எழுத்துக்களையே உபயோகிப்பர்.

இன்டெர்னெட்டை குறிக்கப்பயன்படும் அப்ரிவ்யேஷன் WWW. இதில் W என்பது ஹீப்ரூ மொழியில் 6 என்கிற எண்ணை குறிக்கும். அப்படியானால் WWW என்பது 666. 666 என்பதோ சாத்தானை குறிக்கும்.

உண்மையான கிருத்துவர்களே, இன்டெர்னெட்டை உபயோகிக்கும் நீங்கள் சாத்தானின் கைப்பாவை ஆகிறீர்கள். இறுதி தீர்ப்பின்போது ஏஸு உங்களைப்பற்றி இறைவனிடம் போட்டுக்கொடுப்பதற்கு முன்னால் பாவ மன்னிப்பு பெற்றுக்கொண்டு பைபிளைத் தவிர (கிங் ஜேம்ஸ் வெர்ஷனை மட்டும்) வேறு எதையும் படிக்காமலிருப்பீர்களாக.

7:29 AM  
Blogger புதுமை விரும்பி said...

வருகைக்கு நன்றி, அன்பு ம்யூஸ் அவர்களே.

அதென்ன விசேசம், கிங் ஜேம்ஸின் பைபிளில் மட்டும்?

1:47 AM  

Post a Comment

<< Home

Free Hit Counter
Google PageRank

Your Ad Here