Monday, October 16, 2006

ஆம்ஸ்டெர்டாம்: ஒரு பயணக்குறிப்பு - I


பெல்ஜியத்தை ஐரோப்பாவின் இதயம் என்று சொல்வார்கள். காரணம், மற்ற ஐரோப்பிய நாடுகளான, ஜெர்மனி, ப்ரான்ஸ், ஸ்விட்சர்லாந்து, ப்ரிட்டன், நெதர்லாந்த், லக்சம்பர்க் மற்றும் பல நாடுகளையும் இணைக்கும் இருப்புப் பாதைகள், பெல்ஜியத்தை மையமாக கொண்டு இயங்குகின்றன. அதோடு, ப்ரஸ்ஸல்ஸ், ஐரோப்பாவின் மிக முக்கிய நகரங்களான ஆர்ம்ஸ்டெர்டாம், லக்சம்பர்க், பாரிஸ், லண்டன், ஸ்ட்ராஸ்பர்க், ஷுரிக், பெசில், கொலன், ஃப்ராங்க்பர்ட் போன்ற நகரங்களை மிக எளிதாக விரைவு ரயில்கள் மூலம் இணைக்கிறது.

இப்பொழுது ஆம்ஸ்டெர்டாம் நோக்கிப் போவதற்கு முன், ஐரோப்பாவில் ரயில் போக்குவரத்து பற்றி சில முக்கியமான விசயங்களைப் பார்ப்போம். ப்ரஸ்ஸல்ஸிலிருந்து, பாரிஸ் 336 கி மீ தூரத்தில் இருக்கிறது. இதைக் கடப்பதற்கு, தாலிஸ் என்ற விரைவு ரயில் எடுத்துக்கொள்ளும் நேரம் 1 மணி 27 நிமிடங்கள் மட்டுமே. அதாவது, 237 கிமீ/மணி என்ற வேகத்தில் பயணிக்கிறது அந்த ரயில். இன்னொரு தகவல. ப்ரஸ்ஸல்ஸிலிருந்து, லண்டன் செல்வதற்கு ஆகும் நேரம் 2 மணி 20 நிமிடங்களே! உங்கள் பயணத்தை, நீங்கள் லில்லியிலிருந்து (ஃப்ரான்ஸ்) தொடங்குவீர்கள் என்றால், நீங்கள் புறப்படும் நேரத்திற்கு முன்பே ஆஸ்போடில் (இன்கிலாந்து) இருப்பீர்கள்!! அது எப்படி?

அடுத்த படியாக பட்ஜெட் விசயத்திற்கு வருவோம். இங்கே வார இறுதியில் ஊர் சுற்றி வருவது ரொம்பவும் மலிவானது. மற்ற நாட்களில் பயணப்படுவதைக் காட்டிலும் 10 - 20 சதவீதம் பயணச்சீட்டு விலை குறைவு. இது எல்லா நாடுகளுக்குச் சென்று வரவும் பொருந்தாது. (உதாரணமாக பாரிசிற்கு, வாரத்தின் வேலை நாட்களில் சென்று வருவது மிகவும் மலிவானது.) ஆனால், ஹாலந்துக்கோ, லகஸம்பர்க்கிற்கோ இது பொருந்தும். அதோடு, வார இறுதிச் சலுகைப் பயணம் வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்குத் தொடங்கி, ஞாயிறு நள்ளிரவு வரை பொருந்தும். நாங்கள் வாங்கியிருந்த பயணச்சீட்டின் விலை 40 யுரோ!!! (Rs 2220)





விடியற்காலை 4 மணிக்கே எழுந்து, நூடுல்ஸ் மற்றும் புளியோதரை செய்து, பாத்திரங்களில் நிரப்பிக்கொண்டு, 7.20 மணிக்கான ரயிலைப் பிடித்து, ஆம்ஸ்டெர்டாமை நோக்கிச் சென்றோம். ஒருகாலத்தில் எனது சிறு வயதில், குடும்பத்தோடு திருச்செந்தூர், இராமேஸ்வரம் அல்லது கன்னியாகுமரி சுற்றுலா செல்ல, இப்படித் தான் புளியோதரை, துவையல் தயார் செய்துகொண்டு சென்றுவந்தது ஞாபகத்திற்கு வருகிறது. இப்பொழுது குளிர்காலம் தொடங்க ஒரு சில வாரங்களே இருக்கின்றன. அதனால், குளிரின் கடுமை அந்த காலை நேரத்தில் உணரும் அளவிற்கு இருந்தது. உங்களுக்கு ஒரு அறிவுரை! ஐரோப்பாவில், உங்கள் ஊர் சுற்றும்
படலத்தை, முடிந்த அளவிற்கு, கோடை முடிவதற்குள்ளாகவே வைத்துக்கொள்ளுங்கள்.


பயண நேரம் மூன்று மணி நேரம். இடையில், ஐந்தாறு நிலையங்களில் ரயில் நின்றது. இந்த தடத்தில் உள்ள முக்கியமான இடங்களாக ஆன்ட்வெர்பன் (பெல்ஜியம்), ரோஸெந்தால் (ஹாலந்து), தி ஹேக் (ஹாலந்து) போன்ற இடங்களைச் சொல்லலாம். ஆண்ட்வெர்பன் மற்றும் ஆம்ஸ்டெர்டாம் வைர நகைகளுக்கு பெயர் போனவை. ஒருவர் விரும்பினால், ஆண்ட்வெர்பன் வைரத் தொழிற்சாலையைப் பார்த்துவிட்டு வரலாம். தூய்மையான வைரம் வேண்டுமென்றால், இந்த இடங்களில் வாங்கிக்கொள்வது நல்லது.




சில தொழிற்சாலைகளில், வைர கற்களை எப்படி தூய்மைப் படுத்துவது என்பது பற்றிய நேரடியான செய்முறை விளக்கம் கொடுக்கிறார்கள். நீங்கள் மேலே பார்க்கும் படங்களில் இரண்டுமே வைரக்கற்கள் தான். இரண்டாவது, பாலிஸ் செய்யப்பட்டதற்குப் பின்!


இந்த இடத்தில் ஆண்ட்வெர்பனைப் பற்றி சில விசயங்களைச் சொல்வது நல்லது என்று நினைக்கிறேன். ஆண்ட்வெர்பன், பெல்ஜியத்தின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்று. இதுவே உலக வைர வரத்தக மையம் என்று அழைக்கப்படுகிறது. இன்னொரு அதிசயமான, இந்தியன் என்ற முறையில் பெருமை கொள்ளத்தக்க தகவல், இங்கே 400க்கும் மேலான, இந்திய (குஜராத்தி) குடும்பங்கள் இருக்கின்றனவாம். இங்கே நடைபெறுகிற வைர வியாபாரத்தின் தூண்கள் என்று இவர்களைச் சொன்னால் மிகையாகாது. இவர்களுக்கென்று, ஒரு கிரிக்கெட் விளையாடும் மைதானம், திரையரங்கம் மற்றும் ஜைன் கோயில் என்று எல்லாம் உண்டு. ஆச்சரியப்படவேண்டிய விசயம் தான்!!! அதை விட இன்னொரு
சந்தோசப்படவேண்டிய தகவல், இங்கே நடைபெறும் வைர வணிகத்தில் இந்தியர்களின் பங்கு கடந்த 20 வருடங்களில் 25 சதவீதத்திலிருந்து 65 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. அதோடு, இவர்களுக்கு போட்டியாளர்களான யூதர்களின் பங்கு 70 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக வீழ்ந்திருக்கிறது. இதற்குக் காரணம் யூதர்களின் மதம் தான் என்றால் நீங்கள் நம்புவீர்களா? சூரியன்
உதித்தபின் கடையைத் திறப்பதும், சூரியன் மறைந்த பின் கடையை மூடிவிடும் யூதர்களால், எப்பொழுது வேன்டுமென்றாலும், கடையைத் திறந்து வைத்திருக்கும் இந்தியர்களோடு போட்டி போட முடியாமல் போனது ஆச்சர்யமில்லை தான்.

அடடா! ஆண்ட்வெர்பனிலேயே அதிக நேரம் செலவழித்துவிட்டோம். மீண்டும், நமது ஆம்ஸ்டெர்டாம் நோக்கிய பயணத்தைத் தொடர்வோமா?





Free Hit Counter
Google PageRank

Your Ad Here