இந்த நிமிடத்தின் (20:59 GMT ஸெப் 14, 2006) உலக மக்கள் தொகையாக, 6,544,087,075 என்ற மிகப்பெரிய எண்ணை உலக மக்கள் தொகைக் கடிகாரம் (world population clock) காட்டி பயமுறுத்துகிறது. இத்தனை மக்களுக்கும் பொதுவான, செய்தி தரும் ஊடகமான இணையத்தில் மொத்தம் எத்தனை பக்கங்கள் என்று பார்த்தால், தலை சுற்றுகிறது. கூகுலின் தகவல் தொகுப்பில் அதன் தொடுப்புச்சொல் தேடலுக்கு (for searching key-words), உபயோகிக்கும் பக்கங்களின் எண்ணிக்கை 8,058,044,651. இதைத் தவிர, கூகுலின் தொகுப்பில், சேர்க்கப்படாத எத்தனையோ, இணைய தளத்தின் பக்கங்கள், அங்குமிங்குமாய் சிதறிக்கிடக்கின்றன. அடுத்த இன்னொரு பயமுறுத்தக்கூடிய தகவல் என்னவென்றால், உலகில் 50 மில்லியன் வலைப்பூக்கள் இருக்கின்றன என்று டெக்னோரட்டியின் முகப்புப்பக்கம் சொல்கிறது. ஒவ்வொரு வலைப்பூ அன்பரும், வாரத்திற்கு இருமுறை பதிவு செய்கிறார் என்றால், ஆறு மாதத்தில் உருவாக்கப்படும் மொத்த பக்கங்களின் எண்ணிக்கையை நீங்களே கணக்கு போட்டுய்பாருங்கள். ஒரே ஒரு ஆறுதலான விசயம், இந்த வலைப்பூக்கள், எல்லா மொழிகளிலும் எழுதப்படுகின்றன. ஆனபோதிலும், எல்லா தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உள்ள இணையங்கள் மற்றும் வலைப்பூக்கள் ஒரு மனிதனின் வாசிப்பிற்கு மிக மிக அப்பாற்பட்டவை. இப்படி அபரிமித தகவல்களால் வரும் மனச்சோர்வைத் தான் information anxiety என்று சொல்வார்கள். நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் அபரிமித தகவல்களின் காலத்தை, age of information-overload என்று சொல்லலாம்.
இந்த information anxiety என்பது பற்றி ஒரு சிறிய உதாரணம் மூலம் விளக்க விரும்புகின்றேன். உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு இடத்திலிருந்து, இன்னொரு இடத்தை அடைய விரும்புகிறீர்கள். இரண்டு அல்லது மூன்று சாத்தியமான வழிகள் மட்டும் இருந்துவிட்டால், ஓரளவிற்கு, எந்த வழியில் செல்வது என்று முடிவு செய்வது எளிது. அப்படியில்லாமல், நூற்றுக்கும் மேலான சாத்தியமான வழிகள் இருந்துவிட்டால், உங்கள் நிலைமை என்னவாகும்? இந்த அபரிமித தகவல்களின் காலகட்டத்தில், அதே கஷ்டங்களைத் தான், ஒவ்வொரு மனிதனும், வெவ்வேறு விதத்தில் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். ஒரு கேமிரா வாங்கும் போது அல்லது ஒரு பல்கலைகழகத்தில் சேரும்போது என்று ஒவ்வொரு இடத்திலும் முடிவெடுக்க அதிகமாய் யோசிக்க வேண்டியிருக்கிறது. ஆனால், சந்தோசமான விசயம் என்னவென்றால், இந்த 8 பில்லியன் இணைய பக்கங்களிலும், நாம் விரும்பும் தகவல்களைக் கண்டெடுத்து கொடுப்பதற்கான இயந்திரங்களான (search-engines) கூகுல், யாகூ, ஏ.ஒ.எல் போன்றவற்றால், நாம் ஓரளவு, தப்பித்துள்ளோம். ஆனால், ஒரே ஒரு அச்சுறுத்தலை மட்டும் முன்வைத்து, இந்த பதிவை நிறைவு செய்கிறேன். கடல் போன்ற தகவல்தொகுப்பிற்கும், மனிதர்களுக்கும் இடையே இந்த இயந்திரங்கள் மட்டுமே சர்வாதிகாரத்தனத்தோடு பணிபுரியப்போகின்றன. தங்கள் விருப்பப்படி ஒரு முக்கியமான தகவலை பின்னுக்குத்தள்ளி, இன்னொரு தகவலை முன் வைக்க வாய்ப்பு இருக்கின்றது. இன்னொரு விதமாக சொல்ல வேண்டுமென்றால், காசு கொடுக்கும் கம்பெனிகளை, தேடுதலில் முதன்மையாக வரவைக்க வாய்பிருக்கின்றது.
அடுத்த படியாக கருத்தியல் ரீதியான சர்வாதிகாரம். இந்திய பாட புத்தகங்களில் நடந்த கோல்மால் வேலைகளைப் பற்றி நீங்கள் கேள்விப் பட்டிருப்பீர்கள். இதேமாதிரியான கருத்தியல் ரீதியான திரிபுகளை, புறட்டுகளை இணையத்தில் தேடுபவரின் முன், வைக்க மிகவும் வாய்ப்பிருக்கிறது. இதை ஒரு உதாரணத்தின் மூலம் விளக்குவது அவசியம் என்று நினைக்கிறேன். நீங்கள் கூகுலில் மகரிஷி விளைவு (Maharishi effect) என்ற வார்த்தையைப்போட்டு தேடுங்கள். முதலில் வரும் சில பக்கங்கள், இந்த விளைவை உண்மையென்றும், அதன் பின் வரும் சில பக்கங்கள், இந்த விளைவைப் பொய் என்றும் சொல்லியிருப்பதைப் பார்ப்பீர்கள். இந்த விளைவிற்கு ஆதாரமான தகவல்கள், உலகின் முக்கிய அறிவியல் பத்திரிக்கைகளில் (international scientific journals) விரிவாக எழுதப்பட்டவை. அதனால், இந்த விளாவை பொய் என்று முழுவதுமாக ஒதுக்கிவிட முடியாது. இருந்த போதிலும், பின்னால் வரும் மாற்றுக்கருத்துக்களைச் சொல்லும் பக்கங்கள் (அதை எழுதியர் உண்மையில் எந்த அளவிற்கு நம்பகமானவர் என்று நமக்குத் தெரியாது) நிச்சயம், இந்த கருத்துக்களின் மீது ஒரு சந்தேகப் பார்வையை விதைத்துவிடுவதில் வெற்றியடைகின்றன. இதே மாதிரியான இன்னும் சில பக்கங்களை படிப்பவர் முன் வைத்தால், ஒரு கால கட்டத்தில் அவர் இந்த விளைவின் மீது முழுவதும் நம்பிக்கை இல்லாதவறாய் மாறிவிடக் கூடும்.
அதனால், இந்த தொடுப்புச்சொல் தேடும் இயந்திரங்களைப் பயன்படுத்தும் போது. இந்த அபாயத்தைப் பற்றி அறிந்தவராய் நாம் இருக்க வேண்டும். அதோடு, இந்த இயந்திரங்களும், தாம் வரிசைப்படுத்திதரும் தகவல்களின் நம்பகத்தன்மை மற்றும் வலைப்பூவிற்கு அல்லது இணையத்தின் உரிமையாளரின், அவர் எழுதிய விசயங்கள் பற்றிய அறிவு ஆகிய தகவல்கள் நமக்கு கிடைக்கக்கூடியவையாய்ச் செய்ய வேண்டும்.
செய்தித்தாள்கள், வானொலி மற்றும் தொலைக்காட்சி என்ற மூன்றையும் சாத்தானின் முக்கோணம் (Devil's Triangle) என்று சொல்வார்கள். காரணம், ஒரு மனிதனுக்கு இவைகள் மூன்றும் முதனிலை செய்தி தரும் ஊடகங்களாக இருக்கும் போது, எது உலகத்தில் உண்மை என்று அவனுக்குத் தெரியாமல் போய்விடுகிறது (அதாவது, இந்த ஊடகங்கள் சார்பற்ற பொது நிலையில் இல்லாமல் போகும்போது). இந்த ஆபத்தான முதனிலை ஊடகங்களில், இப்பொழுது தாராளமாக வலைப்பூக்களையும் (blogs), தொடுப்புச்சொல் தேடும் தளங்களையும் (search engines) சேர்த்துக்கொள்ளலாம். அதனால், இந்த ஆபத்தான முதனிலை ஊடகங்களின் தொகுப்பை இணையத்தையும் சேர்த்து, சாத்தானின் சதுரம் (Devil's square/rectangle) என்று இனிமேல் அன்பாக அழைக்கலாமே!!! மேற்குறிப்பிட்ட மற்ற ஊடகங்களை விட, கடைசியாக குறிப்பிட்ட இணைய தளங்கள் மிகவும் ஆபத்தானவை. எனது கருத்துக்கு ஆதாரமான சில செய்திகளை உங்களிடம் இப்பொழுது பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.
இந்த இணைய ஊடகங்கள், எல்லோராலும், மிக எளிதில் அடையக்கூடிய ஒன்றாக இருப்பது, அதற்கு ஒரு காரணம். யார் வேண்டுமென்றாலும், தனக்கென ஒரு வலைப்பூவை உருவாக்கிக்கொண்டு, முதல் பதிப்பிலேயே "மகாத்மா காந்தி உண்மையில் தேசபக்தரா?", "மகாகவி பாரதியின் கருப்புப்பக்கம்", என்று கேள்விகளைக் கேட்டுவிடலாம். இல்லை என்றால், யாரையாவது வம்புக்கிழுத்து ஒரு பதிவைப் போட்டுவிடலாம். வலைப்பூக்களில், ஒரு மனிதனுக்கு முகம் காட்டவேண்டிய அல்லது தான் யாரென்று அறிவிக்க வேண்டிய அவசியமில்லை. அதனால், அவன் திரையரங்குகளில் இருட்டில், மிக மோசமாக அசிங்க வார்த்தைகளுடன் comment அடிக்கும் அதே நடவடிக்கைகளைச் செய்வதற்கு இன்னுமொரு இடமாக வலைப்பூ மாறி வருகிறது. ஆனால், மற்ற ஊடகங்களில், இந்த மாதிரி இருட்டில் கருப்புத்தத்துவம் உதிர்க்க வாய்ப்புகள் இல்லை. அதோடு கருத்துகள் சொல்வதற்கு, ஒரு குறைந்தபட்ச தகுதிகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
அடுத்தபடியாக, வலைப்பூக்களில் பதிக்கப்படும் ஒரு தலைபட்சமான செய்திகள் பற்றி குறிப்பிட விரும்புகின்றேன். சமீப காலமாக, தமிழ் மணம் என்ற வலைப்பூ திரட்டியில் நடந்த முக்கியமான விவாதங்களாக உயர் கல்வி நிலையங்களில் (ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம் மற்றும் ஐ.ஐ.எஸ்.சி) இட ஒதுக்கீடு அவசியமா? இஸ்ரேலின் லெபனான் மீதான தாக்குதல் நியாயமானதா? போன்றவைகளைக் கொள்ளலாம். நடு நிலை வாசகர்களுக்கு, கடைசி வரை எது சரியானது என்பது புலப்படாமலேயே இருந்திருக்கும். கடைசியாக நாம் இது பற்றி, எந்த வலைப்பதிவைப் படித்தோமோ அந்த கருத்துக்கள் சரியானவை என்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும். வழக்காடு மன்றத்தில், இதே மாதிரியான ஒரு நிகழ்வினை நாம் எல்லாம் உணர்ந்திருப்போம். ஒரு அணியின் பேச்சாளர் பேசிக்கொண்டிருக்கும் போது, அவரது அணி தான் வெற்றி பெறும் என்ற எண்ணம் தோன்றும். ஆனால், வலைப்பூக்களிலும் இது மாதிரியான ஒரு தோற்றம் ஏற்படுவது வருந்தத்தக்கதே. அதாவது உண்மை அல்லது சரியானது என்பது எது என்று கண்டுபிடிப்பதற்கு கடினமான ஒரு யுகத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். எந்த யுகத்திலும், உண்மை இத்தனை வலிமையற்றதாய் இருந்திருக்குமா என்பது சந்தேகமாய் இருக்கிறது. உண்மையின் ஒடிந்துவிழும், திறனற்ற, தன்னை காத்துக்கொள்ள முடியாத நிலை மறுக்கமுடியாத ஒன்று. ஆனால், அதற்கான சில காரணங்கள் என்ன என்று இங்கே ஆராய்வோம்.
(1) பதிவாளர், முன்பாகவே தான் ஆதரவு அளிக்கிற கொள்கைகளுக்கு எதிரான கருத்துக்களை முழுவதும் ஒதுக்கிவிடுவது
(2) பிரச்னையின் ஆரம்பம் என்பது, இந்த முடிவெடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உதாரணமாக, இஸ்ரலிய வீரர்களை ஹிஸ்பொல்லா இயக்கத்தினர் கடத்தியதை இந்த இஸ்ரல்-லெபனான் பிரச்னையின் ஆரம்பமாக வைத்துக்கொண்டால், இஸ்ரலின் நடவடிக்கை என்பது சரியானது போலத் தோன்றும். மாறாக, இஸ்ரல் விசாரணையின் பேரில் கடத்திவைத்திருக்கும் எண்ணற்ற பிணைக்கைதிகளை விடுவிக்கும் பொருட்டாக ஹிஸ்பொல்லா இயக்கம் எடுத்த நடவடிக்கையாக இதைப் பார்த்தால், இஸ்ரலின் நடவடிக்கை தவறு என்பது போலத்தோன்றும். அதோடு ஒரு பிரச்னையின் ஆரம்பம் என்று எதை வைத்துக்கொள்வது என்பது அவரவரின் சொந்த அபிப்பிராயம் சம்பந்தப்பட்டது.
அடுத்தபடியாக, சொற்தொடுப்பு தேடும் இணையங்களால் நேரும், ஒரு நிகழ்வு பற்றிய குழப்பமான தகவல்களை உங்களுடன் என் அடுத்த பதிவில் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். (அப்புறம் எப்படி, எனது பதிவுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது?)
அதுவரை, நீங்கள், வலைப்பூவை எப்படி சாத்தானின் சதுரத்திலிருந்து வெளியில் எடுப்பது என்பது பற்றி யோசித்து உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்களேன்.
தலைப்பைப் பார்த்துவிட்டு, கவிதையாய் இருக்குமோ என்று தலை தெறிக்க ஓடிவிடாதீர்கள் நண்பர்களே. இந்த பதிவில், எண்ணங்களுக்கும் (thoughts) அநுபவங்களுக்கும் (experiences), நமது தகவல்களின் தொகுப்பிற்கும் (information database) உள்ள தொடர்பைப் பார்க்கலாம். (இந்த பதிவு ராமகிருஷ்ணர் பற்றிய என் பதிவில் அன்பு சகோதரர் ம்யூஸ் அவர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்கு பதிலாக எழுதப்பட்டது. ) அவரின் கேள்விகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
//கேள்வி என்னவென்றால் முஹம்மதுவின் முன்னால் முருகப்பெருமானோ, அருணகிரிநாதருக்கு அல்லாவோ, ஃப்ரான்ஸிஸ் ஆஃப் அஸிஸிக்கு மாரியம்மனோ ஏன் காட்ஷி தரவில்லை?
ஏனென்றால் இவர்கள் தங்கள் மன பிம்பங்களில் மற்ற தெய்வங்களை அறிந்திருக்கவில்லை. வேறு வகையில் சொன்னால் உங்கள் மனத்திற்கு தெரியாத ஒன்றை தாங்கள் காண முடியாதது ஏன்?
உங்களது தெய்வங்கள் உங்களின் மன கற்பனைக்கு உட்பட்டவராகவே இருப்பது ஏன்?
இந்த அனுபவங்கள் மனத்தின் கற்பனைகளா? //
அன்பான ம்யூஸ்,
மிக முக்கியமான கேள்விகளை எழுப்பியிருக்கிறீர்கள்.
உங்களின் கேள்விகளுக்கு நேரடியான விளக்கம் தருவதை விட, நமது அநுபவங்கள் மற்றும் எண்ணங்களுக்கும், நமது தகவல்களின் தொகுப்பிற்கும் உள்ள நேரடியான தொடர்பு பற்றிய விரிவான செய்தி இன்னும் உபயோகமாய் இருக்கும் என்பதால், இந்த முயற்சி.
நாம் பிறந்த பொழுது, நம்மிடம் உள்ள தகவல்களின் அளவை பூஜ்யம் என கொள்ளலாம். அதன் பின், பார்த்தல், கேட்டல், தொடுதல், முகர்தல், பேசுதல் மூலம் நமது தகவல்களின் அளவை விஸ்தாரப்படுத்துகிறோம். நம்மிடம் உள்ள தகவல்களின் தொகுப்பை, நூலின் நீளமாகவும், எண்ணங்களை பட்டமாகவும் உருவகிக்கலாம். நம்மிடம் உள்ள தகவல்களைப் பொருத்தே எண்ணங்களின் விரிவும், உயர்வும் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த தகவல்களின் தொகுப்பில் இல்லாத பொருட்களைக் காணும்போது, மனது பயந்து விடுகிறது. அதை கடவுள் அல்லது பேய் என்ற ஒன்றொடு தொடர்பு படுத்தி திருப்தியடைகிறது. இந்த தொடர்பு படுத்துதல் மூலம், அந்த பொருள் பற்றிய புரிதல் கிடைத்துவிட்டதாய் நமது ஈகோ சாந்தமடைகிறது. அதனால் தான் கற்காலத்து மனிதன் காற்று, மரம், தீ எல்லாவற்றையும், கடவுளின் உருவமாக பார்த்தான். இதே மாதிரியே புரியாத அநுபவங்களை கடவுளுடன் அல்லது சாத்தானுடன் தொடர்புபடுத்துவது மனதிற்கு மிக எளிதான வேலையாக இருக்கிறது. இங்கே ஒரு குறிப்பிட்ட நிகழ்வைக் குறிப்பிட விரும்புகின்றேன். நகரத்தில் படிக்கிற ஒரு பெண் பேயாடி நான் பார்த்ததில்லை. காரணம், திடுமென்று இரவில் நடக்கிற சில மாற்றங்களை, அவள் காற்றின் அசைவுடன் சம்பந்தப்படுத்திக்கொள்வதாலேயே பேய்பிடித்தலிலிருந்து அவளுக்கு தப்பித்தல் நடக்கிறது. அதே நேரம், ஒரு கிராமத்துப் பெண், இதே மாற்றத்தை பேய் அல்லது சாத்தானுடன் சம்பந்தப்படுத்திக்கொண்டு ஒரு வித மன நோய்க்கு ஆளாகிறாள். அதனால், ஒரு மனிதனின் பகுத்தறிவு விசயத்தில், நமது இந்த தகவல்களின் தொகுப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த விசயங்களின் பின்னணியில் உங்கள் கேள்விகளை ஆராய்வோம்.
ஒரு குளத்தில் இல்லாத மீன் ஒன்றை, நாம் எப்படி அந்த குளத்தில் வீசப்படுகிற தூண்டிலில் எதிர் பார்க்க முடியாதோ, அதே மாதிரி தான், நமது தகவல்கள் தொகுப்பில் இல்லாத ஒன்றை நம்மால் கற்பனை செய்ய முடியாது. இதை நமது மனதின் வரம்பு அல்லது எல்லை என்று குறிப்பிடலாம்.
இந்த மனதின் வரம்பு பற்றிய மூன்று செய்திகளைச் சொல்லிவிட்டு, இந்த பதிவை நிறைவு செய்ய விரும்புகின்றேன். முதலில், மிக்சியோ ககுவின் Hypersurface: A Scientific Odyssey Through Parallel Universes, Time Warps, and the Tenth Dimension என்ற புத்தகத்தில் படித்த சில விசயங்களைத் தங்களுடன் முதலில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நீரில் மட்டும் வாழ்கிற மீன் குஞ்சுகளுக்கு, நமது நில உலகம் அல்லது அவற்றின் அறிவுக்கு புரிந்துகொள்ள முடியாத பொருட்கள் எத்தனை அமானுஷ்யமானதாக இருக்கக்கூடும் என்பதை இந்த புத்தகத்தில் மிக அழகாக எழுதியிருப்பார். அந்த புத்தகத்தின், ஒரு சிறு பகுதியின் மொழிபெயர்ப்பு கீழே.
"ஒரு மழைக்காலத்து நாளில், அந்த குளத்தின் மேற்பரப்பு, எண்ணற்ற மழைத்துளிகளால் மோதப்படுவதைக் கண்டேன். அதனால், குளத்தின் மேற்பரப்பு, சலனமுடையதாய் மாறிப்போயிருந்ததுடன் மேலேயிருந்தத அல்லி மலர்கள் எல்லா திசைகளிலும் நீர் அலைகளால் சிதரடிக்கப்பட்டன. இது அங்கே வாழ்கிற மீன் குஞ்சுகளுக்கு எப்படியாக தோன்றும் என்று யோசித்துப் பார்த்தேன். அந்த மீன்குஞ்சுகளுக்கு, அந்த அல்லி மலர்கள் தாமாகவே அசைவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தக்கூடும். இதற்குக் காரணம், மீன்கள் அந்த நீர்ப்பரப்பின் மேலுள்ள அலைகளைப் பற்றி அறியாததே காரணம். இந்த அறியாமையினால், அல்லி மலர்களின் இயக்கம், மீன்களுக்கு அமானுஷ்யமான ஒரு விசயமாகத் தெரியலாம். மீன் குஞ்சுகளின் உலகம் அவற்றின் பார்த்தல் மற்றும் தொடுதலுக்கு உட்பட்ட பொருட்களால் ஆனது. அந்த சாதாரணமான மலர்களின் இயக்கம் பற்றி மீன்குஞ்சுகளின் உலகத்தில் ஏகப்பட்ட அமனுஷ்ய கதைகள் புலக்கத்தில் இருக்கலாம். நான் அடிக்கடி நினைத்துக்கொள்வதுண்டு. நாமும் அந்த மீன் குஞ்சுகளைப் போன்று எல்லைகளுடனான ஒரு உலகத்தில் வாழ்கின்றோம். நமது வாழ்க்கை முழுவதையும், தொடுதல் மற்றும் பார்த்தலாலான நமது ஒரு உலகத்தில் வாழ்ந்து முடித்து விடுகிறோம். நமது அறிவிற்கு அப்பாற்பட்ட பரிமாணங்கள் மற்றும் உலகங்கள் இருக்கக்கூடும் என்பதை அந்த மீன்குஞ்சுகளைப்போன்றே மறுத்து விடுகிறோம்."
இப்படியாக நிகழ்வுகள் பற்றிய போதிய அறிவின்மை, அந்த நிகழ்வுகளை, அமானுஷ்ய அல்லது கடவுள் மற்றும் சாத்தான்களோடு தொடர்புபடுத்துகிற வாய்ப்பை ஏற்படுத்துகிறது.
அடுத்த படியாக, எட்வர்ட் டி போனோவின், The mechanism of mind என்ற புத்தகத்தின் ஒரு தகவலைப் பார்ப்போம். இந்த புத்தகத்தில், ஜெல்லியின் மேற்பரப்பு மற்றும் அதில் ஊற்றப்படும் நீர் என்ற உருவகத்தின் மூலம் மூளை இயங்கும் விதத்தை விளக்குகிறார், ஆசிரியர்். அதாவது, ஜெல்லியின் மேற்பரப்பை நமது தகவல் சேமிப்பிடமாக கொள்ளலாம். ஐம்புலன்கள் மூலமாகவும், நமக்கு வரும் புதிய செய்திகளை ஜேல்லியின் மேற்பரப்பில் ஊற்றப்படும், நீராகக் கொள்ளலாம். முதன் முதலாக ஊற்றப்படும் நீர், அதற்கென ஒரு பாதையை எதேச்சையாக (randomly) நிர்ணயித்துக்கொள்கிறது. அப்பொழுது, அது ஜெல்லியின் மேற்பரப்பில், சில அரிப்புகளை ஏற்படுத்துகிறது. இப்பொழுது, இரண்டாவது முறை நீர் ஊற்றப்படும்போது, அது ஏற்கனவே நீர் தேங்கிய பாதையில் பயணிக்கிறது. அதேமாதிரியாக புதிய விசயங்கள், நமது தகவல் சேமிப்பு பரப்பில், அரிப்பை அல்லது அடையாளத்தை ஏற்படுத்திவிடுகின்றன. இப்படியாக ஏற்படுத்தப்பட அரிப்புகள், புதிதாய் நம்மை அடையும் தகவல்களின் உண்மையான புரிதலில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த உருவகத்தால் விளக்கப்படும் செய்தியை இப்படியாக புரிந்துகொள்ளலாம். அதாவது, தகவல்கள் (ஜெல்லி பரப்பு) எண்ண ஓட்டங்களை (நீர் ஒட்டம்) வெகுவாகப் பாதிக்கின்றன. அதோடு, புதிய தகவல்கள், சேர்க்கப்படுதலும், வகைப்படுத்தப்படலும், ஏற்கனவே இருக்கிற தகவல் தொகுப்பால் நிர்ணயிக்கப்படுகின்றன. அதாவது, ஒரு கவிஞனோ, எழுத்தாளனோ, ஓவியனோ, அல்லது இசைக்கலைஞனோ அவன்அவ்வாறு ஆவதற்கான விதைகள், அவன் சிறு பிள்ளைப் பருவத்திலேயே விதைக்கப்படவேண்டும்.
கடைசியாக யானையும் ஆறு குருடர்களும் என்ற ஒரு கதையைப் பார்ப்போம். இதில், யானை என்றால் என்ன என்று தெரிந்துகொள்ள விரும்பிய, ஆறு குருடர்களுக்கு முன்பாக ஒரு யானை நிறுத்தப்படுகிறது. ஒவ்வொரு குருடராக சென்று அதை தடவிப்பார்த்துவிட்டு, தங்கள் தொடுதல் மூலம் யானை என்றால் என்ன என்று வரையறுத்துக்கொள்கிறார்கள். யானையின் அகன்ற மார்பைத் தடவிப்பார்த்த மனிதன், யானையை ஒரு பெரிய சுவர் என்று சொல்கிறான். அதன் தந்தத்தைத் தடவிப்பார்த்த மனிதன், அதை ஒரு கூர்மையான் ஈட்டி என்று சொல்கிறான். அதன், தும்பிக்கைப் பகுதியைத் தடவிப்பார்த்த மனிதன் அதை ஒரு பாம்பு என்று சொல்கிறான். அதன் கால் பகுதியைத் தடவிப்பார்த்த மனிதன், அதை தூண் என்று வர்ணிக்கிறான். அதன் காது பகுதியைத் தடவிப்பார்த்த மனிதன், யானையை முறம் என்று வர்ணிக்கிறான். கடைசியாக, அதன் வால் பகுதியைத் தடவிப்பார்க்கும் மனிதன், அதை ஒரு கயிறு என்று வர்ணிக்கிறான். எல்லோருடைய யானை பற்றிய புரிதல்களும், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் சரியே. ஆனால், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தகவல்களின் முழுமையின்மையே, அவர்களின் யானை் பற்றிய வரையறைகள் தவறாகிப் போனதற்குக் காரணம்.
இங்கே பதிந்திருக்கிற தகவல்களின் மூலம், நான் சொல்லவருகிற சில விசயங்கள்:
(1) ஒரு நிகழ்வுக்கு காரணி என்ற ஒன்று பற்றிய புரிதல் இல்லாத வரை தான், அமானுஷ்யம் என்ற ஒன்று இருக்கிறது. ஒரு காலகட்டத்தில், தாமாகவே ஆடிய மரங்கள் ஒரு அமானுஷ்ய விசயமாக இருந்திருக்கலாம். காலப்போக்கில், காற்று என்ற கண்ணுக்குப் புலப்படாத ஒன்று பற்றிய உணர்தல், இந்த நிகழ்வை ஒரு இயற்கையான, சாதாரண நிகழ்வாக மாற்றிவிட்டது.
(2) நம் இளவயதில், நாம் எந்த மாதிரியான தகவல்களை எப்படி சேர்க்கிறோம் என்பது, மிக முக்கியமான விசயம். முதல் கோணல் முற்றும் கோணல் என்பது மிகவும் பொருத்தமான பழமொழி இந்த இடத்தில்.
(3) ஒரு விசயம் பற்றிய மிகச் சரியான முடிவு எடுப்பதற்கு, அது பற்றிய முழு தகவலும் அவசியம். ஆனால், ஒன்று பற்றிய முழு தகவல் என்பது எந்த அளவிற்கு சாத்தியம் என்று தெரியவில்லை. அதாவது, ஒரு குருடனுக்கு, யானை பற்றிய முழு அறிவையும் கொடுக்க இயலுமா?